Ad Widget

நல்லூர் – அரசடியிலிருந்து வெளியேறிய ஐவரை விளக்கமறியலில் வைத்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம்!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4 மணிக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஐந்து பேரும் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள பயணத் தடையை மீறி வீதியில் நின்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் ஐவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறி வந்திருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பி அறிக்கை முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts