Ad Widget

‘நல்லூரை பாதுகாக்க வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்’- செ.கிருஸ்ணராஜா

வடமாகாண சபை தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தின் துணையோடு நல்லூர் என்ற புனித நகரத்தையும் அதன் பண்பாட்டு சிறப்பையும் அதனோடு இணைந்த பண்பாட்டு எச்சங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பதில் தலைவர் செ.கிருஸ்ணராஜா திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை பாரம்பரிய கட்டிடங்களை பேணுவது என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. அபிவிருத்தி என்ற பெயராலும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயராலும் இங்கு காணப்படும் புராதன கோவில்கள், நூற்றாண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கட்டிடங்கள், மற்றும் கலாசார எச்சங்கள் அழிக்கப்படுகின்றன.

அவை அழிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்படும் நிகழ்வுகள் தாராளமாக நடைபெற்று வருகின்றன. ஓரினத்தின் இருப்பும், பண்பாட்டின் வெளிப்பாடும், அந்த இனம் வாழ்கின்ற மண்ணோடு இறுக்கமான நிலையில் பிணைக்கப்பட்டது என்பதை எந்த ஒரு இனமும் அறியும்.

அந்த வகையிலே தமிழ் பேசும் மக்களின் பண்பாடும், இருப்பும் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தை மையமாகக் கொண்டே உறுதிப்படுத்தப்படுகின்றது. காலத்துக்கு காலம் தமிழர்கள் வாழும் மையத்திலுள்ள பண்பாட்டு எச்சங்களை ஒரு சாரார் திட்டமிட்டு அழித்து வருவதை வட இலங்கையிலுள்ள கல்விமான்கள், அரசியல்வாதிகள், சாதாரண பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள்.

இந்த நிலை தற்போது மந்திரிமனைக்கும் ஏற்பட்டு வருவதை நினைக்கும் போது எஞ்சியிருக்கக்கூடிய ஒன்றிரண்டு பண்பாட்டுச் சின்னங்களையும் திட்டமிட்ட நிகழ்சி நிரல்களின் மூலம் ஒரு சாரார் அழிப்பதற்கு எம்மவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் அனைவரும் எமது பலத்தைப் பயன்படுத்தி எஞ்சியிருக்கும் பண்பாட்டுச் சின்னங்களை பேணவேண்டும். இவ்வாறான முதன்மையான செயற்பாட்டுக்கு வட மாகாணசபை முன்வந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts