Ad Widget

நல்லூரில் தண்ணீர் தருவதாக மோசடி செய்தவர்கள் தாக்கப்பட்டனர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

நீர் பாதுகாப்பு என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.

அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன், சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி தீர்மானித்ததற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவத்தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக வியோகஸ்த்தர் உரிமம் பெறுவதுபோல் பாவனை செய்து குறித்த நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

நேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை தாக்கி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு 1 மணி நேரத்தின் பின்னதாகவே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை நடத்தி மேற்படி நிறுவனத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்திருக்கின்றனர்.

நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Posts