Ad Widget

நல்லிணக்கத்திற்கு உதவுங்கள்: உலக நாடுகளிடம் மைத்திரி கோரிக்கை

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக சுதந்திரத்தை மறுசீரமைத்தல், சட்டம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை அமர்வில் நேற்று (புதன்கிழமை) காலை உரையாற்றிய போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார்.

மேற்குறித்த விடயங்கள் மெதுவாக முன்னெடுத்துச் செல்லப்பட்டாலும், முற்போக்கான, ஜனநாயகம் மிக்க, சகல சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் ஒரு ஒழுக்கம் மிக்க உயரிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதே தனது நோக்கமென ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

கடந்த மூன்று தசாப்த கால யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கையை தான் கையேற்கும் போது, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் பாரிய பின்னடையை கொண்டிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சந்தர்ப்பத்தில் நாடு பாரிய வெளிநாட்டு கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை சீரமைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதாக ஐ.நா. குறிப்பிட்டிருந்ததை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரி, எவ்வாறெனினும் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து அமைதியான மற்றும் வளம் மிக்க நாடாக கட்டியெழுப்பும் பயணத்தில் தான் உறுதியாக உள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related Posts