Ad Widget

நல்லாட்சி அரசாங்கத்துக்கான ஆதரவை கூட்டமைப்பு மீள்பரிசீலிக்க வேண்டும்

“நல்லாட்சி அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்ந்தும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்ற ஆதரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என, கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில், ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, “தமிழ் மக்கள், தங்களுடைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை அளித்து, அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், ஏதோ ஒரு வகையில், தமிழர்களுக்கு நல்லது செய்யுமென்ற எதிர்பார்ப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கி வருகின்றது.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட எமது பிரச்சினைகள், தீர்க்கப்படாமல் இருப்பதுடன், நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்துள்ளோம்” என்று, அனந்தி சசிதரன் மேலும் கூறினார்.

Related Posts