Ad Widget

நயினாதீவு என்ற பெயர் தொடர்ந்து இருக்க வேண்டும் – சி.வி.கே

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியில் அமைந்துள்ள நயினாதீவின் பெயர் தொடர்ந்தும் நயினாதீவு என்று இருப்பதையே நாங்கள் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியிருந்தோமே தவிர பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அல்ல என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் கடந்த அமர்வின் போது, நயினாதீவு என்பதன் பெயரானது, நாகதீபம் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அது, நயினாதீவு என்று மாற்றப்படவேண்டும் என அவைத்தலைவர் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இந்த தீர்மானம் தொடர்பில், தெற்கில் பல எதிர்ப்புக்கள் கிளம்பியது. நாகதீப என்ற பெயரை மாற்றினால், கொழும்பிலிலுள்ள தமிழ்ப் பெயர்களை மாற்றுவோம் என இராவணபாலய அமைப்பு ஆர்ப்பாட்டம் செய்தது.

அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடமாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது என்றும் நாகதீப என்று இருந்தால் பரவாயில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்து அவைத்தலைவரிடம் வினவியபோது,

‘நயினாதீவு என்ற பெயரே தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. அதுவே பதிவுப் பெயர். ஆனால், நயினாதீவின் 8 ஆம் மற்றும் 12 ஆம் வட்டாரங்களை, நாகதீப மேற்கு தெற்கு என அழைத்தனர். இந்த மாற்றத்தால் நயினாதீவையும் நாகதீப என்று அழைக்கக்கூடும் என்பதால், அந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம். பெயர் மாற்றம் செய்யுமாறு கோரி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவுக்கு விளக்கமளித்து கடிதம் எழுதியுள்ளேன்’ என்று அவர் கூறினார்.

Related Posts