Ad Widget

‘நம்பகமான விசாரணை வேண்டும்’: போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

missing-women-girls

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலும் தாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட உள்ளுர் நடவடிக்கைகளில் தோல்வி கண்ட நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை முக்கியத்துவம் பெறுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐநாவின் விசாரணை அறிக்கை அவசியமானது என்று தாங்கள் நம்புவதாகவும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 28-வது கூட்டத் தொடரில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மகஜரில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் நடந்த உரிமை மீறல்கள், காணாமல்போதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக உள்ளுரில் விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்படும் என்ற புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வரவேற்றுள்ளனர்.

ஆனால், ஐநா மனித உரிமை பேரவையின் நிபுணர்கள், சர்வதேச நீதித்துறை நிபுணர்கள், காணாமல்போனோர் தொடர்பான விவகாரங்களுக்கான ஐநாவின் நிபுணர்கள் போன்றோரின் பங்களிப்புடன் இந்த உள்ளுர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளுரில் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் முன்னிலையிலும் பல்வேறு விசாரணைகளிலும் சாட்சியமளித்துள்ளனர்.

எனினும், அவர்களுக்கு இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை என்றும் ஐநா மனித உரிமை விசாரணை அலுவலகத்தின் அறிக்கை ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் வெளியிடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts