நண்பேண்டா நிகழ்வு நுழைவுச்சீட்டு வருமானம் மாத்திரம் 1 கோடியையும் தாண்டியுள்ளது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற நண்பேண்டா இசைநிகழ்சிக்காக ஒரு கோடி ரூபாவுக்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக யாழ்ப்பாண நகரசபை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு, யாழ்.நகர சபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் திரைப்பட இயக்குனரும் இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் ஊடாக யாழ். மாநகர சபைக்கு மாத்திரம் 8 இலட்சம் ரூபா லாபம் கிடைத்துள்ளதாகவும், அதில் 7 இலட்சத்து 50ஆயிரம் ரூபா நுழைவுச்சீட்டுக்கான வரி மூலம் கிடைத்துள்ளதாகவும், இட வாடகையாக நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபா மூலம் மூன்று நாட்களுக்கும் அதற்கான 13 வீத வரி பணமுமாக 50 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்ததாகவும் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டு விற்பனை பெறுமதியின் 7.5 வீதத்தை மாநகர சபை வரியாக அறவீடு செய்கிறது. ஆகவே வரி பணமாக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரி பணமாக கிடைக்க பெற்று இருந்தால் 10 மில்லியன் ரூபாய்க்கு நுழைவு சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts