Ad Widget

நட்புறவை பேணுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்: தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி

பொதுமக்கள் பொலிஸாருடன் மிக நெருங்கிய நட்புறவை பேணுவதன் மூலம் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும் என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாராச்சி புதன்கிழமை (03) தெரிவித்தார்.

பிரதேசத்திலுள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொறுப்பதிகாரி தொடர்ந்து கூறுகையில்,

எமது பொலிஸ் நிலையத்தில் கடந்த வருடத்தை (2013) விட இவ்வருடம் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. பொதுமக்களின் ஆதரவுடன் சமூகத்தில் நடமாடிய பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்கள் ஊடாக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எமது பொலிஸ் பிரிவில் தற்போது, பெருங்குற்றங்கள், சிறுகுற்றங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் ஆகியன குறைவடைந்து காணப்படுகின்றன. ஏனைய பொலிஸ் பிரிவுகளை விட குற்றச்செயல்கள் மிகக்குறைந்த பொலிஸ் பிரிவாக காணப்படுவதுடன், யாழ்.மாவட்டத்தில் முதற்தர பொலிஸ் நிலையமாக தெல்லிப்பளை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையில் 6 சிறுவர் துஸ்பிரயோகங்களே இடம்பெற்றுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு, பாடசாலை மட்டங்களில் விழப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு, இரவு நேர பொலிஸ் ரோந்து பணிக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதுடன், வீதிச்சோதனை நடவடிக்கை, சுற்று காவல் நடவடிக்கைகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Posts