Ad Widget

நஞ்சு கலந்த உணவையே நாமின்று உட்கொள்ளவேண்டியுள்ளது

தற்காலத்தில் எமது உணவுகளில் இரசாயணப் பயன்பாடு அதிகரித்தே வருகின்றது. விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சினை உண்டு கொண்டிருகின்றோம். அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம். இந்தச் சவால்களை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம். என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

thurai-singam

நேற்று (09) தனது அமைச்சுப் பொறுப்பினை ஏற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

அன்று நம்முடைய ஒளவை முதாட்டி கூறியபடி “வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்” எனவே வரப்பு உயர்ந்தால் தான் கோன் உயர்வான் என்ற ரீதியில் இந்த வரப்பை உயர்த்துகின்ற பொறுப்பு வாய்ந்த அமைச்சிற்கு 2012ம் ஆண்டு அமைச்சராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அப்பணிக்கு அத்திவாரம் இட்டு தற்போது அவ்வமைச்சினை எனது பொறுப்பில் தந்திருக்கின்றார்.

எனவே வரப்பை நாங்கள் உயர்த்துவோம் இதன் மூலம் தான் கோன் உயர்வான் என்ற ஒளவையின் வாக்கினை மனதில் நிறுத்தி நான் இந்த அமைச்சினைப் பொறுப்பேற்கின்றேன். இந்த அமைச்சின் மூலம் பல செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது முன்னாள் விவசாய அமைச்சரும் தற்போதைய முதலமைச்சரின் கனவு என்று அவர் தெரிவித்தார். ஆனால் கடந்த காலத்தில் அவரால் அந்த கனவினை சரியாகச் செய்ய முடியவில்லை அது அப்போது இருந்த பாசம் பந்தம் அந்த பாசம் என்னவென்று யாவரும் அறிந்ததே.

கிழக்கு மாகாணம் விவசாயத்தின் இதயமாக இருக்கின்ற மாகாணம் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அண்மையில் திருமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் நெற்களஞ்சியம் கிழக்கு மாகாணத்தில் தான் இருந்தது. அந்த பெயரை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இந்த அமைச்சிற்கு இருக்கின்றது.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பார்கள் ஒரு அமைச்சு ஓட வேண்டும் என்றால் அதன் அச்சாணியாக இருப்பவர்கள் எமது பிரதம செயலாளர்கள் பிரதிப்பிரதம செயலாளர்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகள் ஆகியோரே அவர்களின் திறம்பட்ட செயற்பாடுகள் தான் எங்களை உயர்த்தும்.

நாம் மக்களின் அப்பிப்பிராயத்தைத் திரட்டிவந்து அவர்கள் முன் வைப்போம் அதற்கான செயற்பாடுகளை சட்டவரம்பிற்கு உட்பட்ட விதத்தில் மேற்கொள்வது திணைக்களத்தில் அதிகாரிகளே.

நிர்வாகத்தில் மிகவும் முக்கியமாக இருப்பது ஊழல் அற்ற நிர்வாகமாக இருக்க வேண்டும். எமது தேசிய அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதும் இதுதான். ஊழல் அற்ற நிர்வாகம் எமக்கு மிகவும் மக்கியமானது. அதனை திறம்பட மேற்கொள்ளும் செயலணி எம்முடன் இருக்கின்றது.பதவி வரும் போது பணிவும் வர வேண்டும் துணிவும் வரவேண்டும் என்று ஒரு வரி இருக்கின்றது. அது வெறும் வரியல்ல. அந்தவகையில் இவையெல்லாற்றையும் நாம் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் குடியினைத் தழுவிச் செல்ல வேண்டும். மக்களுடைய குறைகளை எம்முடைய குறைகளாக எடுத்து மேற்கொள்ள வேண்டும். விவசாயமாக இருந்தாலும் மீன்பிடியாக இருந்தாலும் இதனை மேற்கொள்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு கைகொடுத்து அவர்களைத் தூக்கிவிட வேண்டியது எமது தலையாய கடமை.

ஆக எமக்கு இருப்பது இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இதற்குள் மிகச் திறம்பட எமது கடமைகளை மேற்கொள்வது எமது பொறுப்பாகும்.பல்வேறு சவால்கள் இந்த விவசாய அமைச்சில் இருக்கின்றது. கால்நடை அமைச்சில் பல சவால்கள்.

எமது கால்நடை வளர்ப்பாளர்கள் மிகப்பெரிய துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் மிகப்பெரிய சட்டமீறல் மிகப்பெரிய மறைமுக ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் மாகாணசபையில் பல தடவைகளில் பேசியிருக்கின்றோம்.

முதல் பேசினோம் அது இலகுவாக இருந்தது தற்போது நாம் அதனை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவே அந்த விடயத்தில் மிகவும் திடமாக எமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு எமது முதலமைச்சர் மிக உறுதுணையாக இருப்பார் என்று நினைக்கின்றேன்.

எமது செயற்பாடுகளை நிகழ்நிரல் படுத்தி செய்வது எமது நிர்வாக முறையில் மிக முக்கியமானது. இதற்கு எமது நிர்வாக உத்தியோகஸ்தர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்கின்றேன். விவசாயத்தில் விஞ்ஞானமுறை கலந்து அனைவரும் நஞ்சை உண்டுகொண்டிருக்கின்றோம்.

அண்மையில் இந்திய தொலைக்காட்சி நிகழ்வில் சொல்லப்பட்டது பீர்க்கு புடலை பாகற்காய் இவற்றைத் தவிர அனைத்தும் நஞ்சுத் தண்மை கொண்டது என்று. அந்தளவிற்கு எமது இரசாயணப்பயன்பாடு மெத்திப் போய் இருக்கின்றது. இதற்கும் நாம் மாற்றுவழி கண்டுகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம். அத்துடன் கடல் உணவுகளில் சிறிய மின்களை உண்பதுதான் நஞ்சுதண்மை அற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்து மண் முழுக்க முழுக்க நைதரசன் வளமுள்ள மண்ணாக மாறிவிட்டது. இந்தச் சவாலகளை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.கிழக்கு மாகாணசபை ஒரு அரசியல் நிறுவனமாக இருக்கின்றது. இதில் கசப்பான விடயங்களை நாம் அப்பால் தள்ளிவிட்டு இனிவருகின்ற இனிப்பான விடயங்களை அதிலும் இனிப்பு அதிகரித்தால் கஷ்டம் ஏற்படும் எனவே உவப்பான விடயங்களை நடைமுறைப்படுத்தும் மாகாணமாக அமைக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் பல்லின பலமதம் பண்மைத்துவம் கொண்ட சபையாக விளங்குகின்றது.ஆனால் நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்து வந்தவர்கள் விஜயன் இங்கு வரும் போது பெண்களைக் அழைத்துவரவில்லை குவேனியைத் திருமணம் செய்து அவரை துரத்தி விட்டு மீண்டும் தமிழ் நாட்டுக்குச் சென்று பாண்டிய பெண்ணைத் திருமணம் செய்தார். எனவேதான் பெரும்பான்மை இனத்தவரில் பாண்டு என்ற சொல் அதிகம் வருகின்றது.

அதுபோல் அரேபிய வணிகர்கள் இங்கு வரும் போது அவர்களும் பெண்களை அழைத்து வரவில்லை. இங்கு இருந்த தமிழ் பெண்களைத்தன் திருமணம் செய்தார்கள் இவற்றில் கருத்து வேற்றுமை இருக்காது. எனவே விஜயனின் தாய்வழியும் இங்குள்ள இஸ்லாமியரின் தாய்வழியும் தமிழ் தான். அனைவரின் தாய்வழியும் ஒன்றுதான்.

ஒரே தாய்வழியில் வந்த நாம் சுதந்திரம் பெற்றதற்கு பிற்பட்ட இந்த காலப்பகுதியில் ஒரு சிறிய தீவிற்குள் நாம் பாரதப் போர் செய்து கொண்டிருக்கின்றோம் இந்த போர் முற்றுப் பெற வேண்டும்.தற்போது அமைந்திருக்கின்ற புதிய தேசிய அரசாங்கம் மிகச்சிறந்த சிந்தனையோடு சென்று இங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் மனிதர்களுக்கான தேவைகள் வழங்கப்பட வேண்டும் அவர்கள் ஒருபோதும் ஜடப்பொருளாக இருக்க முடியாது உரிமையோடு சேர்ந்து அவர்கள் வாழ வேண்டும் என அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நேரமும் காப்போம்- தனியொரு இனத்தின் உரிமை மறுக்கப்பட்டால் அனைவரும் எழுந்து அதனை சீர்செய்து கொடுப்போம், என்ற வகையில் நாம் எல்லோரும் செயற்பட்டால் இந்த நாட்டை இலங்கை மணித்திருநாடு எங்கள் நாடே -அந்த இனிய உணர்வு பெற்றால் இன்ப வீடே என்று அதை இன்ப வீடாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் புதிய கல்வியமைச்சர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, அரியநேத்திரன், யோகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Posts