Ad Widget

நகைக்கடை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

யாழ். நகரில் உள்ள நகைக்கடை வர்த்தகர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக வர்த்தக சங்கத்தில் தங்களுடைய முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று வணிகர் கழகத்தில் நடைபெற்றது. இதன்போது நகைக்கடை உரிமையாளர்கள் திருட்டு நகைகள் என்று தெரியாது அதனைத் தாம் பெற்றுக்கொள்வதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வர்த்தக சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.

gold 564554

இதுகுறித்து வர்த்தக சங்க தலைவர் ஜெயசேகரம் தெரிவிக்கையில் –

களவு நகைகள் யாழ்.நகரில் கொண்டுவந்து விற்கப்படுகின்றன. இவ்வாறு நகைகளை விற்கும் திருடர்களை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கின்றனர்.

அங்கு விசாரணை நடத்தும்போது தம்மால் குறித்த ஒரு நகைக்கடையில் இத்தனை பவுண் நகைகள் விற்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் உதாரணத்துக்கு அந்தக் கடையில் அவர்கள் 5 பவுண் நகையை விற்றிருந்தால் அங்கு வரும் பொலிஸார் 15 பவுண் என்று கூறி வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால் அந்த 5 பவுணைத் தவிர மிகுதி 10 பவுண்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் தாம் நகைகளை வேண்டாமல் இருக்கையில் தாம்வேண்டியதாக பொய்யைக் கூறி பொலிஸார் நகைகளை வேண்டிச் செல்கின்றார்கள். அவ்வாறு கொடுக்காத பட்சத்தில் கைது செய்ய வேண்டிவரும் என்றும் மிரட்டுகின்றனர். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரியை சந்தித்து அவருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இருக்கின்றோம் என்றார்.

மேலும் வர்த்தக சங்கம் என்ற ரீதியில் நாங்களும் சில அறிவுரைகளைக் கூறியுள்ளோம். அவ்வாறு நகைகளை வேண்டுவது என்றால் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே இருக்கின்ற சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி உங்கள் நகைகளை கொள்வனவு செய்யவேண்டும்.

அவ்வாறு விற்பனை செய்ய வருபவர்களது குடும்ப அட்டை அல்லது அடையாள அட்டை இலக்கம் மற்றும் கையொப்பம் வாங்கி நகைகளைக் கொள்வனவு செய்யலாம். அத்துடன் இதுகுறித்து அறிவிப்பதுடன் அடுத்த வாரமளவில் பொலிஸ் உயரதிகாரிகளைச் சந்திப்பதுடன் நகை பெறுவது குறித்து என்ன முறையைக் கையாள வேண்டும் என்றும் அறிந்து வர்த்தகர்களுக்கு தெரிவிப்போம்.

Related Posts