Ad Widget

த.தே.கூ.வை பதிவு செய்யக் கோருவது ஆரோக்கியமான மாற்றம்!

suresh-peramachchantheranதமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டாமென முன்பு எதிர்த்தவர்கள், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென கோருவது, ஆரோக்கியமான மாற்றம் என, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு அனைத்து உறுப்பினர்களும் முன்வந்துள்ளனர்.

இது எத்தகைய போக்கினை காட்டுகின்றது. ஏன் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பலபேருக்குள் ஏற்பட்டுள்ள கொள்கைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கலாம் என நம்புகின்றேன்.

தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழரசு கட்சியின் ஒப்புதல் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒப்புதல் இன்றி சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதுடன், கட்சி சார்பான பல முடிவுகள் அவர்களினால் எடுக்கப்படுகின்றது.

தமிழரசு கட்சிக்குள் மட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எந்தவித பேச்சுமின்றி, தாங்கள் இருவரும் தனித்துவமான முடிவுகளை எடுக்கும் போக்கினை காணக்கூடியதாக இருக்கின்றது.

பாராளுமன்ற கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுதந்திர தினத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தும், இருவரும் சென்றிப்பது தமிழரசு கட்சிக்குள் கொள்கை சம்பந்தமாக சில பிரச்சினைகளை உருவாக்கி இருக்கலாம்.

இந்த விடயம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளமையும் உண்மையான விடயம்.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதென்பது, ஒரு கட்டாயமான விடயம். சரியான வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழி நடத்த வேண்டிய தேவை வந்திருப்பதை தமிழரசு கட்சிக்குள் உள்ளவர்களும் உணர்ந்துள்ளார்கள் என்ற அடிப்படையில் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

அண்மையில் தேர்தல் ஆணையாளரை சந்தித்திருந்த போது அவரும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய முடியும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கி தமக்கு தருமாறு கேட்டிருக்கின்றார்.

அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தரும் பொழுது, பதிவு செய்ய முடியுமென்றும், அவ்வாறு முடியாத பட்சத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கேட்பதும், தொடர்ந்து அவ்வாறு வைத்திருப்பதும் கடினமானது என்றும் தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையகத்தில் இருந்து நிர்ப்பந்தம் இருக்கின்றது. மறுபக்கத்தில் கொள்கை வழி நின்று கட்சியை அதாவது கூட்டமைப்பினை வழி நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அந்த இரண்டின் அடிப்படையில் பார்க்கும் போது, நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன், தமிழரசு கட்சிக்குள் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வந்திருப்பது ஆரோக்கியமான விடயம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டாமென முன்பு எதிர்த்தவர்கள், முன்வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென கோருவது, ஆரோக்கியமான மாற்றம், என்றார்.

Related Posts