Ad Widget

த.தே.கூ.வின் முடிவுக்கு ஈபிடிபி வரவேற்பு

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதவியேற்றிருப்பதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முன்வந்திருப்பதை வரவேற்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அர்த்தமற்ற பகைமையுணர்வை கொட்டித் தீர்ப்பதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிட முடியாது. யாருடன் பேசி எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமோ அவர்களுடன் எமது மக்கள் சார்பாக கைகுலுக்கி பேசியே தீரவேண்டும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக எமது மக்களுக்கான அரும் பெரும் பணிகளை ஆற்றமுடியும். அரசியல் தீர்வுக்கும் வித்திட முடியும்.

கடந்த காலங்களில் போதிய அரசியல் பலம் இன்றியே நாம் அரசில் அங்கம் வகித்து, ஆற்றமுடிந்த பணிகளை எமது அரசியற் பலத்திற்கு ஏற்றவாறு ஆற்றியிருக்கின்றோம். இன்று எமது வழிமுறையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செயலாற்ற முன்வந்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

கடந்த காலங்களில் நாம் விடுத்த பகிரங்க அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றே இதே வழிமுறைக்கு வந்திருந்தால் எமது மக்களுக்கு என்றோ விமோசனம் கிடைத்திருக்கும். காலம் கடந்தாவது எமது நடைமுறை யதார்த்த வழிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஏற்றிருக்கின்றது.

ஏற்றுக்கொண்ட வழிமுறை மீது உண்மையுள்ளவர்களாகவும் விசுவாசம் மிக்கவர்களாகவும் செயலாற்றி நடைமுறையிலும் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

போதிய அரசியல் பலம் இன்றியே நாம் அரசில் இணைந்து எமது நல்லிணக்க முயற்சியால் சாதித்ததை விடவும், அரசியல் பலத்தோடு அரசாங்கத்தில் இணைய முன்வந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பமுடன் செயலாற்றினால் எம்மை விடவும் பல மடங்கு சாதிக்கமுடியும் என்பதை எமது அனுபவத்தின் ஊடாக நாம் கூறிவைக்க விரும்புகின்றோம், இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts