Ad Widget

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்

ஜெனிவாஅமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இறுதியாக 17.02.2016 அன்று நடைபெற்றிருந்தது. இதன்போது சில தீர்மானங்களை எடுக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடத்துவதென்றும் முடிவு எட்டப்பட்டது. எனினும் சுமார் மூன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், இற்றைவரை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கான எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதான காரணமாகும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளும் நம்பிக்கை வார்த்தைகளும் அடிப்படையாக இருக்கின்றனவென தாங்கள் எமக்கு தெளிவுபடுத்தியிருந்தீர்கள்.

புதிய ஆட்சியாளர்கள் ஆட்சிப்பீடமேறி ஒன்றரை ஆண்டுகளாகின்ற நிலையில், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் காணமுடியாதுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களின் அன்றாடப்பிரச்சினைகள், நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துள்ள, எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது’ என்றார்.

‘எதிர்வரும் வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின்போது ஏற்கனவே அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வாய்மூலமான அறிக்கையை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை அகற்றமாட்டோம். சமஷ்டியை தவிர்த்து ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு, சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமாட்டோம் என புதிய ஆட்சியாளர்களும் கூறிவந்த நிலையில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை உள்ளக விசாரணை என திருத்தம் செய்து அதனை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் இணை அணுசரணையை வழங்கி ஏற்றுக் கொண்டிருந்தது.

ஆனால், தற்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை, விசாரணையாளர்களை, சட்டத்தரணிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென மிகவும் தெளிவாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை, குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரயோக ரீதியாக எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆகக் குறைந்தது காணாமல் போனோர் விடயத்தை கையாள்வதற்காக அலுவலகங்கள் அமைக்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளப் போதும் அதனைக் கூட தற்போது வரையில் முன்னெடுக்கவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இவ்வாறான ரீதியில் எதிர்வரும் ஜெனீவாக் கூட்டத்தொடரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு அணுகுவது? என்பது குறித்த தீர்மானமொன்றை எடுக்கவேண்டியுள்ளது.

அதேநேரம் பொதுமக்களின் அன்றாட, நீண்டகால பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதென இறுதியாக நடைபெற்றிருந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அது குறித்தும் எமது தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகளும் முன்நகர்த்தபபடவில்லை.

வடக்கு, கிழக்கில் இராணுவம் உள்ளவாறே நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த காலங்களைப் போன்றே செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

காணி விடுவிப்பு, மீள்குடியேற்றச் செயற்பாடுகளுக்கு பதிலாக காணி சுவீகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. அண்மைக்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இத்தகையை செயற்பாடுகள் பொதுமக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்ததை தாங்கள் நன்கு அறிவீர்கள். பொதுமக்களை பொறுத்தவரையில் கடந்த ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்குமிடையில் வேறுபாட்டை உணரவில்லை என்றே குறைகூறுகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த ஆண்டு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு,கிழக்கு பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசம் என்பதால் விசேட உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறான நிலையில், அது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படும் போக்கு நீடித்துக்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைத்தலைவர்களாக இருக்கின்ற போதும் அக்கூட்டங்களில் மத்திய அரசாங்கத்தின் விருபபுக்கு ஏற்பவே தீர்மானங்கள் எட்டப்படுகின்றன. அத்துடன் வடக்கு மாகாண சபையும் முற்றுமுழுதாகவே புறக்கணிக்கப்படுகின்றது. இதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

இதற்கு முதல் தங்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களை ஊடகங்களில் பிரசுரிக்காமல் தவிர்த்து வந்துள்ளோம். மக்களுக்கு எம்மீதுள்ள நம்பிக்கை வீண்போகாமல் இருக்க வேண்டுமாகவிருந்தால் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தெரியப்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன்னர் எமது ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் கூட்டமைப்பின் பெயரால் ஒருசிலர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதால் மக்கள் மத்தியில் எம்மீது கடுமையான விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் உள்ளபடியால் இந்தக்கடிதத்தை ஊடகங்களின் பார்வைக்கும் அனுப்ப வேண்டிய தேவை எமக்கு எழும்.

அதேபோல் எமது ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டத்துக்கு பிற்பாடு நாம் எடுக்கும் தீர்மானங்களையும் மக்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஆட்சி மாற்றம் மாற்றங்களை தரும் என எதிர்பார்த்தபோதும் எள்ளளவேனும் முற்போக்கான செயற்பாடுகள் அல்லது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெறாத நிலையில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது’ என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts