Ad Widget

தேர்தல் முடிவுகள் த.தே.கூ. மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘தேர்தலின் முன்னர் சில சக்திகள் மக்களை குழப்பும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. இதனால், மக்கள் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டிருந்தது. இதனால், எமது வெற்றியும் தடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், பெரும்பாலான மக்கள் எம்மை ஆதரித்துள்ளனர்’ என்றார்.

‘மேலும், எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பது போன்று உடனடியாக அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் மக்களின் உடனடித் தேவைகள் சம்பந்தமாகவும் நிறைவேற்றப்பட வேண்டிய கருமங்கள் சம்பந்தமாகவும் தாமதம் இல்லாமல் நாம் செய்யவுள்ளோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘ஆட்சி அமைப்பை பொறுத்தவரையில் எமது நிலைப்பாடானது, கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களினால் முன்னாள் ஜனாதிபதியை நீக்கவும் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கும் இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். இந்த ஆணை தொடர வேண்டும். இனி அமைக்கப்படும் அரசாங்கம் அந்த ஆணையை நிறைவேற்றத்தக்கவாறு செயற்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்’ எனவும் அவர் கூறினார்.

Related Posts