Ad Widget

த.தே.கூ கோரிக்கையை நிராகரித்த பிரதான கட்சிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி ஆட்சிமுறை கோரிக்கையை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கோரிக்கை ஏற்கப்படின் நாட்டிற்குள் பிரிவினை ஏற்படலாம் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

சமஷ்டி ஆட்சி என்று நீங்கள் கூறினால் அது பிரிவினைவாதம் என்று மக்களால் நினைக்கப்படக் கூடும் என, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்.

மேலும் தமது கட்சி நிலைப்பாடு ஐக்கிய இலங்கையே என ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறினார் என, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக வடமாகாண சபை தேர்தல் இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்த கோரிக்கையை எழுப்பியதாகவும் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவே மீண்டும் இதுபற்றி பேசுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் தெற்கிலுள்ள பிரிவினைவாத கட்சிகளும் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளைப் பெற இவற்றை பயன்படுத்தும், இந்த விடயம் ஆரோக்கியமானது அல்ல எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்ட போது, இலங்கையின் பிரதான கட்சிகள் தமது கோரிக்கையை ஏற்கும் என எதிர்பார்ப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts