Ad Widget

த.தே.கூட்டமைப்பின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அம்பாறையில்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த கலந்துரையாடலை விரைவில் அம்பாறையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே புதிய அரசியல் யாப்பில் முன்வைக்கப்பட வேண்டுமென இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதோடு, வடக்கு – கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டனர். வடக்கு – கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்கள் ஆர்வமற்று இருப்பதாக ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்த நிலையில், எவ்வாறாயினும் குறித்த முயற்சியை கைவிட முடியாதென்றும் மாற்று வழி குறித்து ஆராயப்பட வேண்டுமெனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்து ஆராயும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படுமென தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts