Ad Widget

தொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் – பாரதி

நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார்.

அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர் சந்திரசேகரம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்று தமிழ் மக்களின் இருப்புக்கான அடிப்படைகள் வேகமாக அழிக்கப்பட்டுவருவதை தனதுரையில் எடுத்துக்கூறிய பாரதி, ” நாம் நினைக்கிறோம் – சில பிக்குகளும் அரசியல்வாதிகளும்தான் படையினரின் ஆதரவுடன் இந்தக் குடியேற்றங்களைச் செய்கின்றார்கள் என்று. நிச்சயமாக இல்லை. அவர்களுக்குப் பின்புலமாக அரச இயந்திரம் இருக்கின்றது. பௌத்த மயமாக்கல் கொள்கை வகுப்பாளர்களாக புத்திஜீகள், பேராசிரியர்கள் என ஒரு குழு இவற்றை துல்லியமாகத் திட்டமிட்டுக் கொடுக்கின்றது. அரசியல், கட்சி வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கு அப்பால் அவர்கள் இந்த இலக்கில் இணைந்து செயற்படுகின்றார்கள்” என்று கூறினார்.

அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது,

எங்கள் எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட எம் எல்லோரையும் நேசித்த தர்மராஜா அவர்கள் மறைந்து இன்று ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும், அவரது நினைவுகளை எம்மால் மறக்க முடியாதுள்ளது. தனக்கென அவர் செய்தவற்றைவிட, தான் சார்ந்த சமூகத்துக்காகவும், தன்னுடன் நெருங்கிப் பழகும் அனைவருக்காகவும் அவர் செய்தவையே அதிகம். அதனால்தான் இன்றும் நாம் அவரது நினைவுகளை சுமந்துகொண்டிருக்கின்றோம்.

கொழும்பு தமிழ்ச் சங்க நூலகத்தில் சட்டத்துறைக்கான தனியான பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கும், அதனை விரிவாக்குவதற்கும் அவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.

சட்டத்துறை என்பது ஒரு காலத்தில் தமிழர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இப்போது அந்த நிலை மாற்றமடைந்துவிட்டது. தமிழ் மாணவர்கள் சட்டத்துறையில் கல்வி பயில்வதில் முன்னர் காட்டிய ஆர்வம் இப்போது குறைவடைந்திருப்பது ஒருபுறம், திட்டமிட்ட முறையில் தமிழ் மாணவர்களுக்கான அனுமதி மறுக்கப்படுவது என்பது மறுபுறமுமாக எதிர்காலத்தில் தமிழர்கள் சட்டத்துறையில் கோலோச்ச முடியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

இந்த நிலையில், தர்மராஜா சட்டத்துறையில் பயில விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அந்தத் துறையில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த நூலகததில் சட்டப் பிரிவை ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவியைச் செய்திருந்தார். இந்த நூலகம் இருக்கும் வரையில் இதன் மூலம் அவர் நினைவுகூரப்படுவார். அவரது தாராள மனப்பான்மைக்கு ஒரு உதாரணம் மட்டும்தான் இது.

சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னர் வரை அவர் என்னுடன் அன்றாடம் இல்லாவிட்டாலும், அடிக்கடி பேசிக்கொள்வார். அன்றைய தினத்துக்குரிய செய்திகள் பற்றி ஆரம்பித்து தமக்கு அபிமானத்துக்குள்ளான தலைவர்களின் கதைகளை சொல்வார். அதில் நிச்சயமாக இந்துபோர்ட் ராஜரட்ணம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஆர்.கனகசாயகம் எனத் தொடங்கி தம்பி வரையில் – அதாவது கஜேந்திரகுமார் வரையில் அவரது உரையாடல் தொடரும். தர்மராஜா அவர்கள் ஒரு காங்கிரஸ்காரர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவருடனும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர். அவருடன் பேசும்போது அந்தத் தலைவர்கள் குறித்த நாம் அறிந்திருக்காத பல செய்திகளைச் சொல்வார். சில விடயங்களை தானே வாசித்தும் காட்டுவார்.

காங்கிரஸ் சாராத – அவர் அபிமானம் வைத்துள்ள ஒரு தலைவர் என்றால், அது நிச்சயமாக நீதியரசர் விக்கினேஸ்வரன்தான். ஆனால், நீதியரசர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து வீட்டுச் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்தது அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அதனையும் அவர் சொல்லியிருக்கின்றார்.

சமகால அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தர்மாராஜா அவர்கள் மிகவும் நேசிக்கும் அரசியல்வாதிகள் என்றால் இருவரைத்தான் சொல்ல முடியும். ஒருவர் நீதியரசர் விக்கினேஸ்வரன். மற்றவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அந்த இருவருமே இந்த மேடையில் இருப்பது முக்கியமான ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

தன்னுடைய அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களையிட்டும், வடக்கு, கிழக்கின் நிலை தொடர்பாகவும் அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தார். வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகளும் அவருக்கு கடும் விசனத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியிருந்தது. அர்ப்பணிப்பும், நேர்மையும், தீர்க தரிசனமும் உள்ள ஒரு பலமான தலைமை எமக்கு இல்லாதததுதான் இந்த நிலைமைகளுக்குக் காரணம் என்பது அவரது கருத்தாக இருக்கும். போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துள்ள இன்றைய காலகட்டத்தில் அவர் மட்டுமல்ல நாம் அனைவருமே இதனைத்தான் உணர்க்கின்றோம்.

பாரிய ஒரு இனப்படுகொலையின் மூலம் இந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நடைபெற்றது ஒரு இனப்படுகொலையா? இல்லையா?என்பதையிட்டுக்கூட இன்றுவரை தமிழ்த் தலைமைகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்கு இன்றுவரையில் நீதி வழங்கப்படவில்லை. இதற்காக ஜெனீவாவில் கிடைத்த வாய்ப்பைக்கூட எம்மவர்கள் முறையாகப் பயன்படுத்தவில்லை. அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் இன்றும் 13 ஐத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமைகளால் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனமும், விரக்தியும்தான் அதிகரித்துவருகின்றது. இவை அனைத்துக்கும் அரசாங்கத்தையும், சர்வதேச சமூகத்தையும் மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டு இருந்துவிட முடியாது. மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்தான். இந்தியாவும், சர்வதேச சமூகமும் அவர்களுடைய நலன்களின் அடிப்படையில்தான் எங்கள் பிரச்சினையைக் கையாள முற்படும். அதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறுதான் நாங்களும் காய்களை நகர்த்தலாம்.

அரசாங்கம் மட்டுமன்றி, அரசாங்க நிர்வாக இயந்திரமும் கூட பௌத்த – சிங்கள மயமாக்கல் என்ற நிகழ்ச்சி நிரலுடன்தான் செயற்படுகின்றது. 47 இலிருந்து நடைபெறும் சம்பவங்களே இதற்குச் சான்று. டி.எஸ்.சேனநாயக்கவினால் 48 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்திலிருந்து தற்போது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் வரை அனைத்துமே ஒரே இலக்கைக் கொண்டவைதான். அதாவது, சிங்கள – பௌத்த மயமாக்கல். தமிழ் மக்களுக்கான தாயகக் கோட்பாட்டை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்த இலக்குகள்.

ஆரம்பத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற அடிப்படையில்தான் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனால்தான் மகாவலியே எமக்கு வேண்டாம் என சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். அரச இயந்திரத்துக்கு இதில் ஒரு பிரச்சினை இருந்தது. நீர்பாசனத் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறாத பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதானால் என்ன செய்வது என்பதுதான் அந்தப் பிரச்சினை. அதற்கு அவர்கள் கண்டுள்ள தீர்வுதான் தொல்பொருள் பகுதியாக ஒரு பகுதியைப் பிரகடனம் செய்வதும், அதனை சிங்கள மயமாக்குவதும். தொல்பொருள் திணைக்களம் இதனைத்தான் இப்போது செம்மையாகச் செய்துவருகின்றது.

தொல்பொருள் திணைக்களம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. இதன் நிர்வாக சபையில் 32 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே சிங்களவர்கள்தான். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஒரு இடம் கருதப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால், அந்தப் பகுதியைப் பேணிப் பாதுகாப்பதற்கும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தத் திணைக்களத்துக்கு உள்ளது. வடக்கில் 337 இடங்கள் இவ்விதம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, அங்கு பௌத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் முறையான ஆய்வுகள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலோ அல்லது, சரியான நில அளவீட்டின் அடிப்படையிலோ வெளியிடப்பட்ட பிரகடனங்கள் அல்ல. எழுந்தாமனான பிரகடனங்கள்தான் அவை.

குறிப்பிட்ட 337 தொல்பொருள் இடங்களில் 167 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளன. அதில் சுமார் 50 வரையிலானவை வெலிஓயா என பெயர் மாற்றப்பட்டுள்ள மணலாறு பகுதியிலுள்ளவை. இந்தப் பகுதிதான் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அதாவது, வடக்கு கிழக்கு இணைப்பை முழு அளவில் துண்டிப்பதை இலக்காகக்கொண்டுதான் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுகின்றது.

இவ்வாறு அண்மைக்காலத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதிதான் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நீராவியடி. இதுதான் இப்போது எரியும் பிரச்சினையாக உள்ளது. இதனை ஒரு உதாரணத்துக்காக மட்டும்தான் சொல்கிறேன். இங்கு நீண்டகாலமாக இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கடந்த ஜனவரியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது. அதில் பிக்கு ஒருவரும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் குடியேறினார். அவருக்கு இராணுவம் பாதுகாப்பளித்தது. நீதிமன்ற உத்தரவையும் மீறி அவர் கட்டுமானங்களை அமைப்பதை இராணுவமும், பொலிஸாரும் தடுப்பதில்லை. அந்தப் பகுதியில் பாரிய விகாரை ஒன்றை அமைப்பது அவரது அடுத்த திட்டம். மீனவர் குடியிருப்பு, விவசாயகக் குடியிருப்பு என்பன அதற்கு அடுத்த திட்டங்கள். இதில் சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் இலக்குடன்தான் அவர் செயற்படுகின்றார்.

இது போல வடக்கில் 337 இடங்களிலும் புத்தர் சிலைகளும், விகாரைகளும் அமைக்கப்பட்டால் நிலைமை என்னவாகும்? இது போன்ற குடியேற்றங்களின் பாதுகாப்புக்காகத்தான் வடக்கில் பாரியளவில் இராணுவம் குவித்துவைக்கப்பட்டுள்ளது. நாம் நினைக்கிறோம் – சில பிக்குகளும் அரசியல்வாதிகளும்தான் படையினரின் ஆதரவுடன் இந்தக் குடியேற்றங்களைச் செய்கின்றார்கள் என்று. நிச்சயமாக இல்லை. அவர்களுக்குப் பின்புலமாக அரச இயந்திரம் இக்கின்றது. பௌத்த மயமாக்கல் கொள்கை வகுப்பாளர்களாக புத்திஜீகள், பேராசிரியர்கள் என ஒரு குழு இவற்றை துல்லியமாகத் திட்டமிட்டுக் கொடுக்கின்றது. அரசியல், கட்சி வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கு அப்பால் அவர்கள் இந்த இலக்கில் இணைந்து செயற்படுகின்றார்கள்.

நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்!

ஒரு புறம் தாயகம் இவ்விதம் அரித்துச் செல்லப்படுகின்றது. மறுபுறம் மக்கள் தொடர்ந்தும் வெளியேறிவருகின்றார்கள். தமிழகத்தில்ஈழத் தமிழருக்காக 105 முகாம்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் அங்குள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்துவருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. தாயகத்துக்கு வரலாம் என நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க எமது தலைவர்களால் முடியவில்லை. இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும்.

அரசாங்க இயந்திரம் சிங்கள புத்திஜீவிகளின் ஆலோசனைகளுடன் முன்னெடுக்கும் இந்த ஆக்கிரமிப்பு யுக்திகளை எதிர்கொள்வதற்கு எம்மிடம் என்ன உபாயம் உள்ளது? இது குறித்து தமிழ்த் தரப்பினர் எப்போதாவது சந்தித்துப் பேசியுள்ளார்களா? கம்பரெலியா, சமூர்த்தி, பனை அபிவிருத்தி நிதியம் என்பவற்றின் மூலமான அபிவிருத்திகளைக் காட்டி அடுத்த தேர்தலை எதிர்கொள்வது மட்டும்தான் எமது அரசியல் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியும் நிவாரணங்களும் அவசியம்தான். மறுக்கவில்லை. ஆனால், அந்த அபிவிருத்தி என்ற மாயைக்குள் மக்களை வைத்திருக்கும் நிலையில் தாயகம் பறிபோவது மறைக்கப்படுகின்றது. அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டது. போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் காணாமல் போய்விட்டது. கடந்த 10 வருடத்தில் எமக்கு கிடைத்தது இதுதான்.இப்போது ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இந்த நிலைமைகள் இன்னும் மோசமாகிவிட்டது.

இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Related Posts