Ad Widget

தொண்டைமானாறு மண்பாதை திறப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன்கருதி வலி.கிழக்குப் பிரதேச சபையால் 4 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக மண்பாதை திங்கட்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது.

sannathy-maan-paathai

இந்த மண் பாதையை நிர்மாணிப்பதற்கு விவசாய அமைப்புக்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேற்படி மண் பாதை நிர்மாணிக்கப்பட்டால், தொண்டைமானாறு நன்னீர்த் திட்டம் பாதிப்படையும் எனவும், அருகிலுள்ள துரிசின் கதவுகள் சேதமடையும் எனவும் அவர்கள் காரணம் கூறியிருந்தனர்.

இருந்தும், யாழ்ப்பாணத்தை அண்டிய பகுதிகளிலிருந்து செல்வச்சந்நிதிக்கு செல்லும் பக்தர்கள், 3 கிலோ மீற்றருக்கும் அதிகமான பயணத் தூரத்தைக் குறைக்க முடியும் என்பதால் இந்த மண் பாதை நிர்மாணிப்பதில் வலி.கிழக்குப் பிரதேச சபை அதிக அக்கறை செலுத்தியது.

அத்துடன், இந்த மண் பாதையானது செல்வச்சந்நிதி ஆலயத் திருவிழாக்காலம் வரையிலும் இருக்கும் எனவும், அதன் பின்னர் அது அகற்றப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்தது.

மேற்படி மண் பாதையை காலங்காலமாக மீனவர்களே நிர்மாணித்து வருகின்றனர். திருவிழா முடிவடைந்ததும், பாதை அகற்றப்பட்டு அதற்கு பயன்பட்ட மண்ணை, மண் திட்டிகளாக நீரின் நடுவில் போட்டு மீன்பிடியில் ஈடுபடும் வழமையை மீனவர்கள் கொண்டுள்ளனர்.

இந்த மண் பாதை திறப்பு நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் கணபதிப்பிள்ளை துரைசிங்கம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts