Ad Widget

தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதிமொழி

JaffH (2)நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 07 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் தங்களது பணிப்புறக்கணிப்பை இன்று வியாழக்கிழமை கைவிட்டுள்ளனர்.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தொண்டர்களில் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்த 80 பேருக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்குக் குறைந்த கல்வித் தகைமையைக் கொண்ட 123 பேருக்கும் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 123 பேரும் தொடர்ந்து நிரந்தர ஊழியர்களாக பணியாற்ற முடியுமென்பதுடன், எதிர்பார்க்கப்படும் கல்வித் தகைமையை பூர்த்தி செய்து அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பொன். பாலசுந்தரம்பிள்ளை மற்றும் தொண்டர்கள் சார்பில் நால்வரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related Posts