தொடர் அழுத்தங்கள் சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும்: சிவாஜிலிங்கம்

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாம் தொடர்ந்து குரல் கொடுத்து அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என வட. மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் சிவாஜிலிங்கம் கலந்துக் கொண்டிருந்த நிலையில், குறித்த விஜயம் தொடர்பில் யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வடக்கு- கிழக்கிலுள்ள சிவில் அமைப்புகள் மற்றும் முக்கியஸ்தர்கள் இணைந்து, இலங்கை அரசாங்கம் இதுவரை என்ன செய்தது, என்ன செய்கிறது போன்ற விடயங்களை உள்ளடக்கிய மாதாந்த ஆய்வறிக்கை ஐ.நா.விற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், விசாரணைகளை எதிர்நோக்கி உள்ளவர்கள், காணி அபகரிப்பு போன்ற அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் தீர்வை காணலாம்.

இலங்கை அரசாங்கத்தின் வாய்ப் பேச்சுக்களாலும், வீரச்சவால்களும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படமாட்டாது. எமது தொடர் அழுத்தங்களே விசாரணைகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

Related Posts