Ad Widget

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற போதிலும் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் கடலில் வளங்கள் சட்டவிரோத தொழில் செய்வபவர்களால் அழிக்கப்படுவரும் நிலையில் தங்களது குடும்பங்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் தமது நிலைமையை புரிந்துக்கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த அதிகாரிகளை உடனடியாக முல்லைத்தீவிலிருந்து மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் சட்டவிரோத தொழில்களை நிறுத்துமாறு கோரியும் இரண்டாவது நாளாக நேற்று(04.10.2022) போராட்டத்தினை தொடர்ந்துள்ளார்கள்.

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு எந்த இடையூறும் விளைவிக்காத வண்ணம் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள அதேவேளை கடற்தொழிலாளர்கள் எவரும் அலுவலகத்திற்கு செல்வதை தடை செய்துள்ளார்கள்.

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் சார்பில் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடற்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி)சி.குணபாலன் ஆகியோர் போராட்டக்காரர்களை சந்தித்துள்ளார்கள்.

அரசாங்க அதிபரிடம் கடற்தொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினை கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தொடர்புகொண்டு தெளிவுபடுத்தியுள்ளார்.

பணிப்பாளர் நாயகம் கடற்தொழிலாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி ஏதாவது ஒரு முடிவினை பெற்றுத்தருவதற்கு தயாராக இருப்பதாக அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

நிர்வாக இடம்மாற்றங்கள் தொடர்பில் பணிப்பாளர் நாயகத்தினாலோ அல்லது அரசாங்க அதிபராலோ உடனடியாக செய்ய முடியாது.

ஒரு இடமாற்றம் செய்ய வேண்டுமாக இருந்தால் பொதுச்சேவை ஆணைக்குழு தான் தீர்மானிக்கும் என்றும் அவர் போராட்டகாரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகளை மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இன்று காலை போராட்டகாரர்கள் தங்கள் குடும்பங்கள் பிள்ளைகளுடன் வந்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts