Ad Widget

தொடரும் ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கும் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் இடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வு எவையும் இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படவில்லை என இலங்கை ரயில்வே பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையிலான இந்த உபகுழுவில் ஐந்து அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் முன்வைக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில், பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த பணியாளர்கள் தொடர்பான முடிவுகளை அமைச்சரவை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts