தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானியா வின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தமிழ் மொழியில் தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவருடைய உரையில் இரண்டு தருணங்களில் தமிழ் மொழியை பிரயோகித்தார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் யாழில் நேற்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் வைபவத்திலும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது அவருக்கு உரையாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தருணத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது என ஆங்கிலத்தில் தனது உரையை ஆரம்பித்த பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்வையர் உரையின் முற்பகுதியில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என தமிழில் விளித்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆங்கில மொழியில் தனது உரையைத் தொடர்ந்தவர் நிறைவு தருணத்தில் “தைப்பொங்கல் வாழ்த்துக்கள்” என தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
