Ad Widget

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக பறித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்றையதினமும் (22) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரையை எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தடைகோரி பலாலி பொலிசார், மல்லாகம் நீதிமன்றத்தை நாடியியிருந்தனர். இதன்படி, விகாரையின் வழிபாட்டிற்கோ, வீதிப் போக்குவரத்துக்கோ இடையூறு ஏற்படுத்தி போராட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், சட்டவிரோத போராட்டங்களையும் தடைவிதித்துள்ளது.

தடை அறிவித்தலை பொலிசார் வாசித்ததும், போராட்டத்திலிருந்தவர்கள் கலைந்து சென்றனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனும், மற்றும் சிலரும் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரத்தின் பின், கலைந்து சென்றவர்களும் போராட்டக்களத்துக்கு திரும்பினர். இரவு 7.15 மணிவரை அங்கு போராட்டம் நடந்தது. இன்று காலையும் போராட்டம் நடக்கும், 26ஆம் திகதி வரை போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்தனர்.

Related Posts