Ad Widget

தேர்தல் நடத்தத் தயார்! ஆனால் அரசிடமிருந்து அறிவிப்பு இல்லை!!

அரசு அறிவிப்பு விடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் எப்போதும் தயாராகவே உள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரசிடமிருந்து அதற்கான அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

mahintha-thesappireya

அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கூறமுடியாது என்று தெரிவித்த அவர், மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசத்தை இதற்கு உதாரணமாகவும் எடுத்துரைத்தார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, டி.பீ.விஜேதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து வேட்புமனுத் தாக்கல் திகதி மற்றும் தேர்தல் திகதி என்பன அறிவிக்கப்பட்டன.

இதன்போது தேர்தல்கள் ஆணையாளரின் அதிகாரத்தை ஜனாதிபதி எடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. உண்மையில், எமது அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இதற்கான அதிகாரம் இருக்கின்றது. அரசமைப்பின் 1981/1ஆம் இலக்கத் தேர்தல் சட்டத்தின் 10ஆவது அதிதியாயத்தில் ஜனாதிபதிக்கு மேற்படி அதிகாரம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இருக்கின்ற நாடாளுமன்றத்தை 2016 ஏப்ரல் மாதம் வரை தொடரலாம். அதற்கு அப்பால் தொடரமுடியாது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்த அரசிடமிருந்து எனக்கு ஏதாவது அறிவிப்பு கிடைத்துள்ளதா என்று கேட்டால், இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. அறிவிப்பு விடுத்தால், தீயணைப்புப் படையினரைப்போல துரிதமாகச் செயற்பட தேர்தல்கள் திணைக்களம் தயாராக உள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதற்கு அரச அச்சகமும் தயார்நிலையில் உள்ளது. இவற்றில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்து குறைந்தது 52 நாட்கள், கூடியது 66 நாட்களுக்குள் தேர்தலை நடத்தவேண்டும். நாடாளுமன்றத்தைக் கலைத்து 53ஆவது நாளில் தேர்தலை நடத்தவும் நாம் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.

இதன்போது 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர். 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், புதிய முறைக்கமைய தேர்தலை நடத்த எவ்வளவு காலம் எடுக்கும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர்,

“20ஆவது திருத்தச் சட்டமூலம் முழுமைப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்படும் என்பது அரசியல் கட்சிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதுமாத்திரமின்றி, சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும், எல்லை மீள்நிர்ணயம் செய்வது குறித்தும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்றும் எல்லை நிர்ணய சபையே தீர்மானிக்கும்.

எனவே, காலஎல்லை குறித்துக் கூறமுடியாது. மகாபாரதத்தில், அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் ஒன்றை வழங்கினார். அர்ச்சுனன் தனது எதிரி ஒருவரை (தட்சகன்) சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லப்போவதாக சபதம் எடுப்பார். இருப்பினும், சூரியன் அஸ்தமிக்கும் வேளை நெருங்கியபோதும் அர்ச்சுனனால் தனது எதிரியைக் காணக்கூட முடியாதுபோகும். இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணர் சூரியனை மறைத்து இருளை உருவாக்கி, அந்த எதிரியைக் கொல்வதற்கு அர்ச்சுனனுக்கு உதவிசெய்வார். இதன்போது காலத்தை நிர்ணயித்து எதையும் செய்யக்கூடாது என்று அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் உபதேசமும் வழங்குவார்” என்று மேற்படி விடயத்துக்கு மகாபாரதத்திலிருந்து உதாரணம் கூறினார் தேர்தல்கள் ஆணையாளர்.

Related Posts