Ad Widget

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் எச்சரித்துள்ளார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (11) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காலப்பகுதி 13ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றது. அன்றைய தினம் யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட சில கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளன.

அதனை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்தும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் மூடப்பட்டு இருக்கும்.

அத்துடன் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச சொத்துக்கள் பஸ்கள் மீது தேர்தல் சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, சட்டவிரோதமாக ஒன்று கூடல், மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், வாகன பேரணி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்படுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே தேர்தல் காலப்பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அனைத்து தரப்பினரும் செயற்பட்டு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Posts