Ad Widget

தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது

மலேசியாவில் புலிகள் மாநாடு இடம்பெறவும் இல்லை. அதில் புலிகளுக்கு ஆதரவாக பேசப்படவும் இல்லை. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது. கனவிலும் நினைவிலும் புலி முகமே அவர்களுக்குத் தெரிகின்றது என குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் பொது எதிரணிக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொது எதிரணியின் செயற்பாடுகளில் பங்கேற்கவும் இல்லை எனத் தெரிவித்தார்.

suresh

மலேசிய புலி ஆதரவு மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்றுள்ளது. அதேபோல் பொது எதிரணியின் நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பினுடையது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலேசியாவில் நடைபெற்றது புலிகள் மாநாடு அல்ல. அது உலகத் தமிழர்களின் மாநாடு. உலகில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பிலும் பேசப்பட்டதே தவிர விடுதலைப் புலிகளை பற்றியோ அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றியோ பேசப்படவில்லை. இலங்கை, இந்தியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் தமிழர் அமைப்புக்கள் இதில் பங்கேற்றிருந்தன. எனினும் அரசாங்கம் தற்போது புலிக் கனவு காண ஆரம்பித்து விட்டது. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கத்தின் கனவிலும் அவர்களின் சிந்தனைகளிலும் புலிகளின் முகம் மட்டுமே தெரிகின்றது.

தேர்தலில் தனக்கு வெற்றியினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் புலிகளைப் பற்றியும் பயங்கரவாதம் பற்றியுமே பேச வேண்டியுள்ளனர். ஆகவேதான் நாங்கள் எதைப் பேசினாலும் எங்கு சென்றாலும் அரசாங்கத்திற்கு எமது செயற்பாடுகளை புலிகளின் செயற்பாடுகளாக சித்தரிக்கின்றனர். தேர்தலில் சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கான தந்திரமே தவிர அரசாங்கத்தின் கருத்துக்கள் எவையும் உண்மை அல்ல.

அதேபோல் பொது எதிரணியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தொடர்புபடுத்தி இனவாதத்திற்கு இந்த அரசாங்கம் அடித்தளம் போடுகின்றது. தமிழ் மக்களின் ஆதரவு இன்று அரசாங்கத்திற்கும் தேவைப்படுகின்றது. எதிர்க்கட்சிகளுக்கும் தேவைப்படுகின்றது. அரசாங்கத்தின் வெற்றிக்கு தமிழ் மக்களின் ஆதரவுக் கரம் நீட்டும் போது அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். அப்போது அரசுக்கு புலிகளை தெரியாது. ஆகவே எதிர்க்கட்சியின் பக்கம் நாங்கள் செயற்பட்டால் எங்களை விமர்சிக்கின்றனர். அப்போது மட்டும் நாங்கள் புலிகளாக இவர்களுக்குத் தெரிகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொது எதிரணியின் மேடையில் ஏறவில்லை. அதேபோல் பொது எதிரணியினருக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் பொது எதிரணியினரை ஆதரிக்கப் போகின்றோமா அல்லது என்ன செய்யப்போகின்றோம் என்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை.

அதேபோல் இதுவரையில் பொது எதிரணி தொடர்பிலோ அல்லது அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் எவரும் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இல்லை. எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானங்களை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts