Ad Widget

தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வருகின்றார்கள் – தட்டுவன்கொட்டி கிராம மக்கள்

ஆனையிறவுக்கு அருகில் போரினாலும் இயற்கையினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் வருகின்றார்கள் என்றும் மற்றைய நேரங்களில் தங்களைக் கவனிப்பதில்லையெனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

1

மேற்படி கிராமத்திற்கு திங்கட்கிழமை (16) விஜயம்செய்த அமைச்சர் அங்குள்ள வயல்கள், குளங்கள் மற்றும் பாடசாலையைப் பார்வையிட்ட பின்னர் அக்கிராமத்து பொதுமக்களைத் தட்டுவன்கொட்டி பொதுநோக்கு மண்டபத்தில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

இதன்போதே மக்கள் இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

‘மிகப்பழமை வாய்ந்த கிராமமான தட்டுவன்கொட்டிக்கு அருகாமையிலேயே ஆனையிறவு இராணுவமுகாம் அமைந்திருந்ததால், இப்பகுதி மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயரவேண்டி நேர்ந்தது. குடிதண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாதபோதும், சொந்த மண்ணைவிட்டு நிரந்தரமாக வெளியேற விரும்பாத இம்மக்கள் 2010ஆம் ஆண்டில் இருந்து மீளவும் குடியேற ஆரம்பித்துள்ளார்கள்.

மாகாணசபைத் தேர்தலின்போது அரசாங்கத் தரப்பினர் தட்டுவன்கொட்டிக்கு மின்சாரவசதி செய்து தருவதாகக் கூறியே வாக்குக் கேட்டனர்.

அடையாளமாக ஒரு மின்சாரக் கம்பத்தையும் நாட்டிச் சென்றார்கள். ஆனால், தேர்தலில் தோற்ற பின்னர் பழிவாங்கும் நடவடிக்கையாக மின்வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது என்று குற்றம்சாட்டிய பிரதேசவாசிகள், தங்கள் பிள்ளைகள் இரவு நேரங்களில் குப்பி விளக்கிலேயே படிக்க நேர்வதால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் இரவு நேரங்களில் கும்மிருட்டுக் காரணமாக அவசர தேவைகளுக்குக்கூட வெளியே சென்றுவர முடியாது இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

3

நல்ல தண்ணீர் வசதியற்ற இக்கிராமத்துக்குக் கரைச்சிப் பிரதேச சபையினர் தினமும் ஒருதடவை வாகனத்தின் மூலம் குடிதண்ணீர் விநியோகித்து வருகின்றனர். அவசர தேவைகளுக்கு, கிராமத்தின் ஒரேஒரு பாடசாலையான கண்ணகையம்மன் மகா வித்தியாலயத்தின் மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் இருந்தும் நீர் பெறப்படுகிறது.

எரிபொருள் செலவு காரணமாகக் கரைச்சிப் பிரதேச சபை, முழுக்கிராமத்துக்குமான தண்ணீரை குறிப்பிட்ட மூன்று, நான்கு இடங்களில் வைத்தே வழங்கி வருகிறது.

தண்ணீருக்காகக் கரைச்சிப் பிரதேச சபைக்கு நன்றி தெரிவித்த பெண்கள், வயது முதிர்ந்தவர்களால் தண்ணீரை அதிக தூரத்துக்குக் காவிச் செல்ல முடியாது இருப்பதால் நீர் வழங்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் முன்வைத்தார்கள்.

கடற்றொழிலையும் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதி மக்கள் மழையை நம்பியும், இரணைமடுவில் இருந்து வழிந்துவரும் நீரையும் நம்பியே விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.

ஆனால், மழை பொய்த்து, இரணைமடுவும் வற்றிப்போனதால் நெற்செய்கை இம்முறை முற்றாக அழிந்து போய்விட்டது. இதனால் தட்டுவன்கொட்டியின் பிரதான குளங்களான பரவக்குளத்தையும் காட்டுக்குளத்தையும் புனரமைத்துத் தருமாறும் அம்மக்கள் கோரியுள்ளனர்.

வடமாகாண விவசாய அமைச்சிற்குட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளை இப்பிரதேசத்துக்கு அழைத்து வந்து விவசாயத்துக்கு வேண்டிய நீரை நிரந்தரமாகப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளேன்.

அத்தோடு, ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக உரிய தரப்பினரோடு பேசி நடவடிக்கை எடுக்கவுள்ளேன்’ என அமைச்சர் தெரிவித்தார்.

4

5

7

8

10

11

Related Posts