Ad Widget

தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிக்க நடவடிக்கை – டக்ளஸ்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மேலும் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

dak

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நேற்றய தினம் (01) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இக்கல்லூரி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தமிழ் விழாவில் பங்குகொள்வதில் மகிழ்ச்சியடையும் அதேவேளை, இதன் ஏற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய இந்நிகழ்வு தமிழர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கின்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டது.

எந்த சமூகமும் கலை, கலாசாரங்களை பின்பற்றுவதற்கு அல்லது தொடர்வதற்கு அமைதியான சந்தோசமான சூழல் இருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்தச் சமூகத்தின் கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறானதொரு சூழல் இல்லாத போது கலை, கலாசாரங்களை பாதுகாக்க முடியாது என்பதை கடந்த கால தேவையற்ற அழிவுயுத்தத்தில் காணமுடிந்தது.

இன்று ஒர் அமைதியான சூழல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த கால தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களினால் தான் எமது மக்கள் இழப்புகளையும் இடப்பெயர்வுகளையும் சந்திக்க வேண்டி நேர்ந்தது.

அவ்வாறானதொரு நிலை எதிர்காலத்திலும் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுடன், எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும்.

முன்னைய அரசுகள் எம்மை மாற்றான்தாய் பிள்ளையாக நோக்கியிருந்த போதிலும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் அந்த நிலை மாற்றப்பட்டிருந்தது.

அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே முள்ளிவாய்க்கால் வரை எமது மக்கள் அவலங்களை சந்தித்திருந்தனர் என்றும் எதிர்காலங்களில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், இக்கல்லூரியின் ஆரம்பம் முதல் எனது பங்களிப்பு இருந்துள்ளதுடன் எதிர்காலத்திலும் அது தொடரும்.

கல்விசாரா ஊழியர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதைப் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி 2015 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கியலும் மற்றும் சித்திரம் போன்ற அழகியல் பாடநெறிகளை மீண்டும் ஆரம்பித்து செயற்படுத்தும் அதேவேளை, மேலும் பல சிறப்பான வளங்களைப் பெற்றுக் கொடுத்து புதிய மெருகூடன் இக்கல்லூரியை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

முன்பதாக கல்லூரியின் பிரதான வாயிலிலிருந்து அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து வாழ்த்துரையினை கல்லூரியின் உப பீடாதிபதி சத்தியேந்திரன் பிள்ளை நிகழ்த்த கல்லூரியின் பீடாதிபதி அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் மன்றகாப்பாளர் பாலகணேசனும் உரைநிகழ்த்தினார்.

முத்தமிழ் விழாவையொட்டி வெளியிடப்பட்ட கலாசுரதி நூலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டு வைக்க அதனை சிவசிதம்பர தேசிய சச்சிதானந்த ஐயர் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கல்லூரி பீடாதிபதியினால் அமைச்சர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதில் இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் நந்தகுமார் ஸ்ரான்லி வீதி இலங்கை வங்கிக் கிளை முகாமையாளர் தர்மராசா, கல்லூரியின் சிரேஸ்ட ஆலோசனை உறுப்பினர் லயன் வைத்தியகலாநிதி தியாகராஜா, விரிவுரையாளர் லலீசன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

அசாதாரண சூழ்நிலை காரணமாக செயலிழந்திருந்த யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இற்றைவரை சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts