Ad Widget

தேசிய அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கும் வேலையில்லா பட்டதாரிகள்!

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பு கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

அரசாங்கம் தங்களுக்கு தருவதாகக் கூறிய வேலைவாய்ப்புக்களை இதுவரை வழங்கவில்லை எனவும், “தொழில் வழங்கப்படும்” என்ற உறுதிமொழி வாய் வார்த்தையில் மட்டுமே காணப்படுவதாகவும், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் பெஸ்டியன் வீதியில் மேற்கொண்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளன.

தாங்கள் மேற்கொண்ட 50 நாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை யாரும் வந்து பார்வையிடவும் இல்லை, தம்மைப்பற்றி விசாரிக்கவும் இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

50 நாட்களைக் கடந்துள்ள எமது சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான தீர்வு உடனடியாக கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் இந்த விடயம் தொடர்பாக நாளை மிக முக்கியமான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படுமென வேலையில்லா பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் நாளை நாடு பூராகவும் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என இவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

வேலையில்லா பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், வைத்தியர் சங்கங்கள் மற்றும் பல தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

இந்தப் போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர, மற்றும் வைத்திய சங்கத்தின் செயலாளர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts