தேசியப் பட்டியலில் ஆசனமா? – நிராகரித்தார் விக்னேஸ்வரன்!

நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றே குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், வடக்கு மாகாண மக்களுக்குப் பணியாற்றவே தாம் விரும்புவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்குத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கக் கூட்டமைப்பு தலைமை விருப்பம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுபற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பதுடன், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராகக் கூட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தும் எண்ணம் கூட்டமைப்பிடம் இல்லை எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts