தேசியத் தலைவர் பிரபாகரனின் கனவுக் கிராமமான அக்காச்சி குடியிருப்பு பகுதியில் புற்பாய் நெசவு நிலையம் ஒன்று, வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 2.0 மில்லியன் செலவிலேயே குறித்த பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அவர் உரையாற்றுகையில், “இந்திய இராணுவத்தின் காலத்தில் படுகொலைகளுக்குள்ளான இக்கிராமத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் தோற்றம் பெற்றதே இந்த அக்காச்சி குடியிருப்பாகும்.
இக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த புற்பாய் தொழிற்சாலை கடந்த கால அனர்த்தங்களால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தது.
அபிவிருத்திக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒதுக்கப்பட்ட இந்நிதியில் இத்திட்டத்தினை மேற்கொண்டிருப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு நிலைபேறான அபிவிருத்தியின் மூலம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே. அந்த வகையில் இத்திட்டத்தை தெரிவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
உதவித் திட்டப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோருடன் இப்பகுதி இளைஞர்களும் முனைப்புடன் செயலாற்றி இத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வட மாகாண தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர், முந்நாள் கோப்பாய் பிரதேச செயலாளர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அக்காச்சி குடியிருப்பு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.