Ad Widget

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் பிணை!

யாழில். டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் அவதானித்து அதனை சீர் செய்யுமாறு மருத்துவ அத்தியட்சகருக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு வார கால அவகாசம் முடிவடைந்த போதிலும் அவை சீர் செய்யப்படாதமையால் மருத்துவ அத்தியட்சகர், அங்கு கட்டடப்பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்தகாரர்கள் மூவர் மற்றும் அருகில் இருந்த உணவக உரிமையாளர் ஆகிய ஐவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொதுசுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கினை நேற்று விசாரித்த மல்லாகம் நீதிவான் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அப்பகுதிகள் சீர் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு , அவர்களைக் கடுமையாக எச்சரித்த பின்னர் ஐவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

Related Posts