Ad Widget

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொண்டர்களாக குறைந்த சம்பளத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 35 பேர் தமது பதவிகளை விட்டு வட மாகாண சுகாதார அமைச்சினால் இடைநிறுத்தப்பட்ட போதிலும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியால் தொடர்ந்து கடமையாற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அரசசார்பற்ற நிறுவனம் வழங்கிய நிதி உதவியின் மூலம் தலா ஆறாயிரம் ரூபா பெற்று கடமையாற்றி வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவாகளுடைய சேவை முடிவடைந்துள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார்கள்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இவர்களுக்கு வட மாகாண சபை மூன்று மாத கால நீடிப்பு வழங்கி நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக அறிவித்து அவர்களை கடும் நெருக்கடிக்குள் தள்ளியது.

இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மத்திய சுகாதார அமைச்சருடன் மேற்கொண்ட தொடர்புகளின் அடிப்படையில் உரிய ஊழியர்களில் ஒரு பகுதியினர் கொழும்பு சென்று அமைச்சரிடம் தமது நிலைமையை எடுத்துக் கூறியதை அடுத்து, அவர்களைத் தொடர்ந்து கடமையாற்ற அமைச்சர் அனுமதித்து கடிதம் வழங்கியுள்ளதுடன் நிரந்தர நியமனத்தை வழங்குவதாகத் தெரிவித்தார் என்று ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Posts