Ad Widget

குழப்பம் விளைவித்தவர் கைது புகைப்படம் தொழில்நுட்ப மோசடி என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

யாழ். தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

தற்போது வளர்ச்சியடைந்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புகைப்படங்கள் பலவாறாக திரிபுபடுத்தப்படுகின்றன. தெல்லிப்பழை சம்பவத்திலும், குறித்த புகைப்படங்கள் பொலிஸாருக்கு எதிராகத் திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். தெல்லிப்பழையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் நபரைப் பிடித்து பொலிஸாரிடம் தாம் ஒப்படைத்தனர் என அங்குள்ள மக்கள் தெரிவித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் நபரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் இல்லை. பொலிஸார் எவரையும் கைதுசெய்யவும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி முன்னர் தெரிவித்தார்.

இது விடயத்தில் தெல்லிப்பழை மக்களதும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்துகளும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கும் கருத்துகளுக்குமிடையே முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதால் இது தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடியிடம், தெல்லிப்பழை ஆர்ப்பாட்டம் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கும், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்குமிடையே முரண்பாடு நிலவுகின்றதே என வினவியபோது அவர் பதிலளிக்கையில்,

தெல்லிப்பழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் எந்த நபரையும் மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன், பொலிஸாரும் எவரையும் கைதுசெய்யவில்லை என்றார்.

இந்தப் போராட்டத்தில் குழப்பம் ஏற்பட்ட பின்னர் நபரொருவரின் கையை பொலிஸார் பிடித்துச் சென்றனர் என மக்கள் கூறுகின்றனர். நீங்களும் இதை ஊடகங்கள் மூலமாக பார்த்ததாகக் கூறியுள்ளீர்கள். அவர் இப்போது எங்கே இருக்கிறார்?

யாழில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறுகின்றபோது அங்கு குழப்பம் ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அங்குள்ள நபர்களைப் பொலிஸார் அவ்வேளையில் பிடிப்பர். அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார். அதுபோலவே இந்தச் சம்பவத்திலும் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் தம்மால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் கூட்டிச் சென்றனர். அதற்குத் தேவையான புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன என பொதுமக்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கூறுகின்றனர். இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

தற்போது வளர்ச்சியடைந்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புகைப்படங்கள் பலவாறாகத் திரிபுபடுத்தப்படுகின்றன. தெல்லிப்பழை போராட்டத்தின்போதும், பொலிஸார் நபரொருவரின் கையைப் பிடித்துக்கொண்டு செல்வதுபோல நவீன தொழில்நுட்பத்தினூடாக புகைப்படங்களைத் திரிபுபடுத்தியிருக்கலாம்.

தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இந்தச் சம்பவத்திலும் பொலிஸாருக்கு எதிராக புகைப்படங்களைத் திரிபுபடுத்தியிருக்கலாம்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தம்மிடமுள்ள ஆதாரங்களுடன் தெல்லிப்பழை மக்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பொலிஸில் முறைப்பாடு செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

tellippalai_police

Related Posts