Ad Widget

தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள்

அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவ குழுவினால் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.

இதன்படி ஐம்பது பேர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் நேற்று (வியாழக்கிழமை) வரை முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த சத்திர சிகிச்சை குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் வகையிலேயே குறித்த இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறித்த மருத்துவக் குழுவானது தெல்லிப்பழை வைத்தியசாலையில் 3 தினங்கள் தங்கியிருந்து சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளனர் என வைத்திய கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில்,

வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்களுக்கு உதவுவதை முழு நோக்கமாக கொண்டு குறித்த குழுவினர் யாழ்.மாவட்டத்துக்கு வருகை தந்து சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை புது மனிதர்களாக வெளி உலகத்துக்கு காண்பிப்பதுடன் அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது.’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள குறித்த வைத்திய குழுவின் பணிகள், இன்றுடன் (வெள்ளிகிழமை) முடிவடைகின்றது.

இந்நிலையில் இதுவரை ஐம்பது பேர் சிகிச்சைக்காக பதிவு செய்திருந்ததாகவும் அதில் முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் வீடு திரும்பும் நிலையில் உள்ளதாகவும் குறித்த மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

குறித்த சிகிச்சையின் முதல் கட்டமாக வாய்ப்பகுதியில் தழும்புகள் காயங்கள் ஏற்பட்டவர்களுக்கே பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதோடு, இதில் அநேகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.

எனினும் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் மற்றுமொரு குழு இலங்கை வரக்கூடியதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், இதன்போது அனைத்து விதமான முக தழும்புகளையும் சரிசெய்யும் சிகிச்சைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

Related Posts