Ad Widget

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்: கூட்டமைப்பு

sumantheranநாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த தெரிவுக்குழுவில் பங்குபற்றாமல் இருக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பலரது கருத்தாகும் என்று கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

இந்த விசேட கூட்டத்தின் போது வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. விசேடமாக காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன. விசேடமாக புள்ளிவிபரத்திணைக்களம் தற்போது சேகரிக்கும் புள்ளிவிபரம் தொடர்பாக பலருடைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் புள்ளிவிபரத்திணைக்களத்தின் விபரம் திரட்டும் செயற்பாட்டை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

இதற்கு மேலதிகமாக வலிகாமம், சம்பூர் உட்பட ஏனைய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் இல்லாது ஒழிக்கப்பட்டு பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் நீக்கப்பட்டு மக்கள் தொழில் செய்வதற்கு இடையூறாக உள்ள பல விடயங்கள் நீக்கப்படவேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.

இதேவேளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அதிகாரத்திற்குள் உள்ள சில உள்ளுராட்சி மன்றங்களில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அவ்வாறு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக எதிர்த்து வாக்களித்தவர்களுக்களை கட்சியில் இருந்தும் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது உட்பட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதவேளை இவ்வாறான ஒற்றுகூடல்கள் எதிர்காலத்தில் கிரமமாக முன்னெடுப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்தார்.

Related Posts