Ad Widget

தெரிவுக்குழுவிற்குச் சென்று காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mpநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் சென்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்து உலகத்தை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தெரிவிக் குழுவிற்கு வருமாறு அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்தியவின் புதிய பிரதமரான நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்த போது தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியதன் பின்னர் கூட, அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்தால் தான் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறுவது இலங்கை அரசாங்கத்தின் மோசமான பிற்போக்குத்தனமான எண்ணத்தைத் தான் காட்டுகின்றது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்புக்கும் இடையிலும் ஏற்படுகின்ற தீர்வைதான் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னிலைப்படுத்தி ஒரு தீர்வை எடுக்க முடியும்.

தவிர தமிழ்மக்கள் இதுவரை பல தெரிவுக்குழுவை சந்தித்து இருக்கின்றனர். எந்தத் தெரிவுக்குழுவும் தீர்வைத் தரவில்லை. ஆகவே தீர்வை வழங்காத தெரிவுக்குழுவுக்கு போய் காலத்தையும் நேரத்தையும் வீணடித்து உலகத்தை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை.

கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைத்தபோது அன்றைய இந்திய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அளித்த அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றாமல் விடுவதும் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனை ஆரம்பத்தில் இருந்து அணுகப்பட வேண்டும் என இந்தியாவின் புதிய பிரதமாராக பதவி ஏற்றுள்ள மாண்புமிகு நரேந்திர தாமோதரதாஸ் மோடி கூறியுள்ளதாக நாங்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். அதை நாங்கள் வரவேற்கின்றோம்.

தமிழ்நாட்டு மீனவர்களும் ஈழத்தமிழ் மீனவர்களும் இந்த பிரச்சனையிலே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு.

குறிப்பாக கச்சதீவு ஒப்பந்தத்திலே கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைத்தபோது அன்றைய இந்திய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அளித்த அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றாமல் விடுவதும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

அந்த வாக்குறுதியில், இருநாட்டு மீனவர்களும் கச்சதீவிலே வலைகளை உலர போடவும் அதேபோல அவர்கள் அங்கு தங்கி ஓய்வு பெறுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தன.

கச்சதீவுக்கு அண்மையிலுள்ள இந்திய மீனவர்களை கைதுசெய்வது என்பதும் தவறான நடவடிக்கை. ஆகவே இவ்வாறான அணுகுமுறைகளை கைவிட்டு புதிய ஒரு தீர்வை புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி எடுக்க வேண்டும் என்பதே எமது விருப்பு ஆகும்’ என மேலும் தெரிவித்தார்.

Related Posts