Ad Widget

தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

வடக்கில் மீன்பிடிப்பதற்கு “தடையுத்தரவை” மீறி தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வட கடலில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கும், ரோந்து பிரிவினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் வடமாகாண ஆளுனர் மற்றும் வடக்கின் மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தெற்கிலிருந்து சம்பிரதாயபூர்வமாக வடக்கிற்கு சென்று அனுமதிப்பத்திரம் பெற்று மீன்பிடிப்பவர்கள் அத்தோடு வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்கள், இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இப்பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது புதிதாக தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாமென அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதனை மீறி புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கியிருப்பது தொடர்பில் இப்பேச்சுக்களின் போது அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது அவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், வடபகுதி மக்கள் நாம் அங்கு செல்லும் போது மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கின்றனர். நாமும் அம்மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உறுதிமொழிகளை வழங்குகின்றோம்.

அவை நிறைவேற்றப்படாத போது அம்மக்கள் நாம் பொய்களை கூறுவதாகவே நினைப்பார்கள்.

எனவே வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சம்பிரதாயபூர்வமாக தெற்கிலிருந்து வடக்கு சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை விடுத்து புதிய அனுமதிகளை வழங்குவதற்கு இடமளிக்க முடியாது என்றும் இப்பேச்சுக்களின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்தார்.

Related Posts