தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தினால், சமஷ்டி தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையுடன் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், “தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய மாற்றம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு பாரிய விளைவினை ஏற்படுத்துவதை அனைவரும் உணர வேண்டிய ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான சூழ்நிலையில் தான் இந்த தேர்தல்கள் இடம்பெற்றன. இந்த தேர்தலின் போது சில தமிழ் கட்சிகள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டுமென்று கோரியிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை மறுத்து வைத்திருக்கின்றது. தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களித்துள்ளதைப் பார்த்தால், அந்த கோரிக்கையினை நிராகரிக்கும் முகமாக வாக்களிக்கவில்லை என்பது தென்படுகின்றது.
ஆனால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றம் கூட அதனால் ஏற்பட்டதல்ல என்பது திடமாக தெரிகின்றது. தமிழர் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும், அதி கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.
தெற்கில் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படையில் அது சமஷ்டியை மீறியதாகவும் நாட்டை இரண்டாக பிரிக்கும் அரசியலமைப்புச் சட்டமாகவும் இருக்கும் என சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை நிராகரித்து, மகிந்தராஜபக்சவிற்கு வாக்களித்திருப்பதற்கான காரணம், ஊழல் – நிர்வாக குறைபாடுகள் உள்ளிட்டவையாக இருக்கலாம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தொடர்ச்சியாக சிங்கள மக்களுக்குக் கொடுத்த எச்சரிக்கை அதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் கைவிடப்படுமாக இருந்தால், எந்த வழியில் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படப் போகின்றது என்பதைக் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினர் கூடி ஆராய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற உள்ள வேளையில், அதனை நிறுத்தக் கூடிய வகையில், தற்போது அதற்கான சாத்தியக் கூறுகள் எழுந்துள்ளன. அப்படியான எதிர்பாராத சவால் எழுந்துள்ள இந்த சூழ்நிலையில், குறித்த கொள்கையில் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் சார்பாக எழுந்துள்ளது.
கடந்த 2 வருட காலமாக சில விடயங்களால் பிரிந்திருந்த தமிழ் கட்சிகள், கொள்கையளவில் ஒரு நாட்டுக்குள்ளே பயணிப்பதுதான் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியமானதும் அடிப்படையானதுமாகும்” எனத் தெரிவித்தார்.