குருநாகலில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் – ரத்தரவூவ இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காருக்குள் இருந்த இருவரால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்த நிலையில் குருநாகல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.