யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் துன்னாலையைச் சேர்ந்த இளைஞன், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகிய சம்பவத்தில், பொலிஸாரினால் அதிரகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலுள்ள 6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றுள்ளது. இதனையடுத்தே, பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தில், 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், “பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இளைஞனைச் சுட்டுக் கொன்றமை பிழையான விடயம். ஏனென்றால், பொலிஸாரைப் பொறுத்த வரையில், அவர்களுடைய ஆணைக்குக் கட்டுப்படாமல் ஒருவர் செல்கின்றார் என்றால் அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. ஒருவரைச் சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த வாகனத்தின் டயருக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.