Ad Widget

துன்னாலையில் ஒரு வாரமாக தொடரும் வாள்வெட்டு: ஐவர் வைத்தியசாலையில்

யாழ். துன்னாலைப் குடவத்தை பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல் காரணமாக, இது வரையிலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (08) தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அதேயிடத்தில் திருட்டு மணல் அகழ்பவர்கள் தொடர்பில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவல் வழங்கியவர் மீது கடந்த மே 30ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்று வாள்வெட்டை மேற்கொண்டது.

இதில் துரைசிங்கம் பிரபா (வயது 29) என்பவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாள்வெட்டுக்கு இலக்கானவரின் குழுவும் மணல் கடத்தும் குழுவும் அடிக்கடி குழு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை (07) சென்ற குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களுக்கு கற்களை வீசியும் கம்பிகளைக் கொண்டும் அடித்துள்ளது.

இதில் பொன்னையா பொன்னுத்துரை (வயது 48), பொன்னுத்துரை தயானி (வயது 45), பொன்னுத்துரை துன்சியா (வயது 19) இராசா நந்தகுமார் (வயது 29) ஆகிய நால்வரும் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் எவரையும் கைது செய்யவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெல்லியடி பொலிஸார் கூறினர்.

Related Posts