Ad Widget

துணை மருத்துவ சேவைகளுக்கு விண்ணப்பம் கோரல்!!

“வடக்கு மாகாணத்தில் பெருமளவு வெற்றிடங்கள் காணப்படும் துணை மருத்துவ சேவைகளுக்கு சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாகாண இளையோர்கள் விண்ணப்பிப்பதன் ஊடாக பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு கிடைக்கும்”இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஒன்பது பதவி நிலைகளுக்கும் ( பாடசாலை பற்சிகிச்சையாளர், சுகாதார பூச்சியியல் அலுவலர், கண் தொழிலநுட்பவியலாளர், செயற்கை அவயவ தொழில்நுட்பவியலாளர், பொது சுகாதார பரிசோதகர், இதயத்துடிப்பு பதிவாளர், மூளை மின் இயக்கப் பதிவாளர், பொது சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், பல் தொழில்நுட்பவியலாளர்), நிறைவுகாண் மருத்துவ சேவையைச் சேர்ந்த மூன்று பதவி நிலைகளுக்கும் (மருந்தாளர், தொழில்சார் சிகிச்சையாளர், கதிரியலாளர்) ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 30, 2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல்களை www.health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

ஆள்சேர்ப்பிற்காக 2017/2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் விண்ணப்பிக்க முடியும். இவர்கள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.health.gov.lk ஊடாக மாத்திரமே இதற்றாக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு உதவுவதற்காக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கு உதவி தேவையானவர்கள் அலுவலக நாள்களில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை தேவையான ஆவணங்களுடன் செல்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

தெரிவு செய்யப்படுபவர்கள் ஒன்றரை தொடக்கம் இரண்டு வருடங்களிற்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்குரிய பயிற்சி நெறிகளுக்கு உள்வாங்கப்படுவர். பயிற்சி ஆரம்பிக்கும் காலத்திலிருந்து அனைவருக்கும் கொடுப்பனவாக கணிசமான தொகை வழங்கப்படும்.

பயிற்சியின் நிறைவின் போது சித்தியடையும் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும். மிக முக்கியமாக ஆள்சேர்ப்பின் போது மாகாண மற்றும் மாவட்ட கோட்டாக்கள்(ஒதுக்கீடுகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் வடமாகாணத்தில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் வடமாகாணத்தில் இந்த மருத்துவ சேவைகள் சார்ந்த பதவி நிலைகளுக்கு பெருமளவான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே தகுதி வாய்ந்த அனைவரும் உடனடியாக விண்ணப்பிப்பதன் மூலம் அரசாங்க வேலை வாய்பினையும் மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளலாம் – என்றுள்ளது.

Related Posts