நாடளாவிள ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிமன் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த நோய் தொற்று உள்ளதாக அறிந்துக்கொண்டவர்கள் அதிக சன நடமாட்டம் உள்ள பகுதியில் சென்று நிற்பதை தவிர்க்க வேண்டும், தடிமன் அல்லது தும்மல் ஏற்படுகின்ற போது மூக்கை துவாய் ஒன்றினால் மறைத்துகொள்ள வேண்டும், தரமான ஒரு வைத்தியரை உடனடியாக நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜயசுந்தர பண்டார தெரிவிக்கையில்,
விசேடமாக கரப்பிணி தாய்மார்கள் இந்த நோய் அறிகுறிகள் தென்படும் அடுத்த கனத்தில் வைத்திய சாலையை நாடுவது சிறந்தாகும். காரணம் அவர்கள் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போதும் கால தாமதமாக வைத்திய சாலைக்கு செல்வார்களாயின் அது அவர்களுக்கு துரதிஷ்டமாக அமைந்துவிடும்.
அதேநேரம் சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார் ஆகியோர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். காரணம் இவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அதிக காலம் இவர்களுக்கு நோய் தொற்று இருக்குமாயின் அவர்கள் நியூமோனியா நிலைமை அடைவதற்கான சாத்தியம் உள்ளது. அந்நிலைக்குச் செல்லாமல் அவர்களை மீட்பதற்காகவே நோய் அறிகுறி தென்படும் முதல் தருவாயிலேயே வைத்தியரை நாடுங்கள் என்று அறிவுருத்தல் விடுக்கின்றோம்.
பண்டிகை காலத்தில் அதிக அவதானத்துடன் செயற்பட்டு இந்நோய் தாக்கத்திற்கு ஆட்படாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.