தற்போது அபாயகரமான நிலையை நோக்கி தீவிரமடைந்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (15) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

9 மாகாணங்களினதும் பிரதான செயலாளர்கள், உள்ளூராட்சி, மாகாண சுகாதார, மாகாண கல்வி ஆகிய விடயதானங்களுக்குப் பொறுப்பான அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாநகர சபை மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள், உப தலைவர்கள், மாநகர ஆணையாளர்கள், செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் நிகழ்நிலை முறைமை ஊடாக இணைத்து, இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் தலைமையில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர்கள் மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ருவன் செனரத், இந்த நிலைமை நாம் வாழும் சூழலோடு தொடர்புபட்டு உருவாவதால், பொதுமக்களின் பங்களிப்பு இன்றி, சுகாதாரப் பிரிவினரால் மாத்திரம் அல்லது அரசாங்க நிறுவனங்களால் மாத்திரம் இதனைக்கட்டுப்படுத்த முடியாது. கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் வாராந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருவதுடன்இ இதனால் சுகாதாரப் பிரிவின் கொள்ளளவை மீறி மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்றார்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பிரதானி, சகுந்தலா ஜானகி இங்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொசு லார்வாக்கள் (முட்டைப் புழுக்கள்) இருக்கும் இடங்கள் குறித்த சோதனைகளில், அதிக சதவீதத்தைக் கொண்ட இடங்களாக பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களே (41.8மூ ஆக) அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது நுளம்புகள் பெருகும் இடங்களின் அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதுவரை 28,913 நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் 26.7 சதவீதம் தூக்கி எறியப்பட்ட கழிவுப் பொருட்கள் மூலமும், 14.7 சதவீதம் தற்காலிகமாக அகற்றப்பட்ட பொருட்களின் மூலமும் கொசுக்கள் அதிகமாகப் பெருகும் இடங்களாக மாறியுள்ளன என்றார்.
இதில் கலந்துகொண்ட தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, ‘இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களில் சிறுவர்கள்,இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடங்குவதால், நாட்டின் எதிர்கால சந்ததியினரையும்,உழைக்கும் சக்தியான இளைஞர்களையும்,பிள்ளைகளுக்கு தாயாகவும் இருக்கும் பெண்களையும் நாம் இழப்பது மிகவும் வருத்தத்திற்குரிய நிலைமையாகும் என்றார்.
இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா தெரிவிக்கையில், ‘அதிகளவில் நுளம்பு பெருகும் சாத்தியமுள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் வளாகங்களில் கொசுக்கள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால்இ அது குறித்து சுற்றுச்சூழல் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 98ஆவது பிரிவின் கீழ் அந்த வளாகத்திற்கு எதிராக நீதவானிடமிருந்து தடை உத்தரவைப் பெற முடியும்’ எனத் தெரிவித்தார்.
இன்று ஆரம்பமாகும் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் வரும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்,அதன்போது நாடு தழுவிய ரீதியில் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன:
இன்றையதினம் முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை, நகரங்கள், வடிகால் அமைப்புகள், வர்த்தக வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல்.ஜூன் 18 (வியாழன்), பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவன வளாகங்களையும் சுத்தப்படுத்துதல்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தப்படுத்துதல். ஜூன் 20 சனிக்கிழமை தனிப்பட்ட வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தப்படுத்துதல் அவசியமாகும்.