Ad Widget

தீவகத்தில் பலர் காணாமல் போக கடற்படையும் ஈ.பி.டி.பியுமே காரணம்!

தீவகத்தில் பல இளைஞர், யுவதிகள் காணாமற் போனமைக்கு கடற்படையினரும் ஈ.பி.டிபியினருமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் காணாமற்போனோரின் உறவினர்கள் பலரும் ஆதாரங்களுடன் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று நடந்தன. இதில் சாட்சியமளிப்பதற்காக 193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கையில் தீவகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்றவர்களையும், கடற்றொழிலுக்கு சென்றவர்களையும் கடற்படையினர் விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர். இதேபோன்று கரையோரப் பிரதேசங்களின் வீடுகளுக்குள் புகுந்தும் அங்கிருந்த இளைஞர், யுவதிகளை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இதுதவிர மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற கடற்படையினர் வீதிகளில் சாதரணமாக சென்றவர்களையும் விசாரணை என்ற போர்வையில் கைது செய்து கொண்டு சென்றிருந்தனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது.

இதேபோன்று ஈ.பி.டி.பியினரும் தீவகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்றனர். இரவு வேளைகளில் இராணுவத்தினருடன் சேர்ந்து வீடுகளுக்குள் புகும் ஈ.பி.டி.பியினர் தங்கள் பிள்ளைகளை பிடித்துச் சென்றனர் என்றும் சாட்சியாளர்கள் தங்கள் சாட்சியமளித்தனர்.

இதன்போது சாட்சியாளர்கள் தங்கள் உறவினர்களைப் பிடித்த கடற்படையினர் எந்தெந்த முகாம்களில் அவர்களை வைத்திருந்தனர். இராணுவத்துடன் வந்து தங்கள் உறவினர்களை பிடித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் யார் என்ற விபரங்களையும் ஆதாரத்துடன் முன்வைத்திருந்தனர்.

Related Posts