Ad Widget

தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்; நுண்கலைப்பீட மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் இன்று காலை மூன்றாவது தடவையாக வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களது கோரிக்கைக்கு பதில் கிடைக்காத போது மீண்டும் கடந்த 17 ஆம் திகதியும் வகுப்புப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை.

எனவே மீண்டும் இன்று காலை மூன்றாவது தடவையாக போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று மருதனார் மடத்தில் உள்ள இராமநாதன் நுண்கலைப்பீடத்திற்கு முன்னால் மேற்கொண்டனர். எனினும் சரியான பதில் கிடைக்காதவிடத்து தொடர்ந்தும் தங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

எங்களது போராட்டத்தை நிறுத்துவதற்கு போலியான வாக்குறுதிகளையே பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்குரிய ஆய்வுக்கட்டுரை தொடர்பில் கூட இதுவரை எம்முடன் எவரும் வந்து பேசவில்லை.

இவ்வாறான நிலையில் எமக்கு எழுத்துமூல வாக்குறுதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் தந்தால் மட்டுமே நாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரையாண்டுக்கான பாடத்திட்டங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் பரீட்சையினை இன்னும் நடாத்தவில்லை என்றும் பரீட்சை நடாத்தப்படாமையினால் அடுத்த அரையாண்டுக்கான விரிவுரைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அத்துடன் பாடத்திட்டங்களை பார்வையிட கூட முடியாத நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.

மேலும் இங்கு பல குறைபாடுகள் காணப்படுகின்றது என்றும் இணைப்பாளர் ஒருவர் நியமிக்கவில்லை என்றும் உபகரண வசதிகள் இல்லை , சிலைகளை அமைப்பதற்கான கெமிக்கல்கள் இல்லை எங்களுடைய சொந்தப் பணத்திலேயே உபகரணங்களை கொள்வனவு செய்கின்றோம் என்றும் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts