Ad Widget

தீர்வின்றி தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) ஏழாவது நாளாக நீடித்து வருகிறது.

தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இவர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில்; கைதிகளே இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மெகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளும் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts